Home செய்தி தமிழகம் சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு...

சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

0

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே.   

திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் இந்திய அரசின் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், முதல் இடைக்கால பாராளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஆறு ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினராகவும், சட்ட மேலவையின் எதிர்கட்சித் துணைத் தலைவராகவும், சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் ஜில்லா போர்டு தலைவராகவும் இன்னும் பல பதவிகளில் இருந்து மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார்.  

மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் B.R.அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், பண்டிதர் ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார், காமராஜர் போன்ற ஒப்பற்ற தலைவர்களோடு இணைந்து நாட்டிற்கு பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ஒரே ஆண்டில் (1954-ஆம் ஆண்டு) 2,000 பள்ளிகளை திறந்து வைத்து கொங்கு மண்டலத்தில் மாபெரும் ஒரு கல்விப் புரட்சிக்கு வித்திட்ட சாதனையாளர் என்ற பெருமைக்குரியவர் ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள். இவர் தன்னுடைய வாழ்நாளை நாட்டிற்காக அர்ப்பணித்து சேவையாற்றி வருபவர். இவரின் நூறாவது பிறந்த நாள் ஜனவரி 10, 2020. இத்தகைய உயர்ந்த மாமனிதருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நவம்பர் 26-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடக்கவுள்ள இந்திய அரசியல் சட்டம் 70-ஆம் ஆண்டு நிறைவுநாள் விழாவில் சிறப்பு செய்திட நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் அவர்கள் முயற்சி மேற்கொண்டிருந்தார்.  

கொங்கு மண்டலத்திற்கு பெருமை சேர்த்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்களுடைய வரலாற்றை இந்திய அரசியல் சட்டம் 70-ஆம் ஆண்டு நிறைவுநாள் விழாவில் எடுத்துரைக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் இன்று (19.11.2019) இந்திய துணை ஜனாதிபதி மேதகு M.வெங்கையா நாயுடு அவர்களை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் அவர்களும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி அவர்களும் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி மேதகு M.வெங்கையா நாயுடு அவர்கள் உடனடியாக பாரத பிரதமருக்கு பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும் டிசம்பர் 10-ஆம் தேதி அன்று திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெறும் விழாவில் இந்திய துணை ஜனாதிபதி மேதகு.M.வெங்கையா நாயுடு அவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்களுக்கு சிறப்பு செய்வதாகவும் துணை ஜனாதிபதி அவர்கள் உறுதி கூறியுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply

Exit mobile version