பாண்டிய வேளாளரின் பத்தினி தெய்வம் சீலைக்காரியம்மன்!

0
1000
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு அண்ணன்மார்களுடனும் ஒரு தங்கையுடனும் பிறந்தவர் பட்டியம்மா. பிறவியிலேயே வலது கால் ஊனம். எனவே, வீட்டில் உள்ளவர்கள் பிரியத்தையும் செல்லத்தையும் கொட்டி இவரை வளர்த்திருக்கிறார்கள். பட்டியம்மாளின் தங்கை பெயர் வீரம்மாள். அன்புக்குரிய அண்ணன்கள், பாசத்தைக் கொட்டும் தங்கை… எனப் பட்டியம்மாவின் வாழ்க்கை இனிமையாக நகர்ந்து கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில்தான் கிழக்கிலிருந்து வணிகம் செய்ய அண்ணன், தம்பி இருவர் வந்திருக்கிறார்கள். இவர்கள் பட்டு நூலைக் கொண்டு பட்டுச் சீலை நெய்து, வியாபாரம் செய்பவர்கள். அது, பட்டியம்மா பருவம் எய்தியிருந்த நேரம். அந்த இரண்டு பேரும் கரூர், புளியூருக்கு அருகிலுள்ள காணியாளன்பட்டியில் உள்ள வேப்பங்குடிக்கு வியாபாரம் செய்ய வந்தனர். பட்டியம்மாளும் அங்குதான் பிறந்து அண்ணன்மார்களுடன் வாழ்ந்து வந்தாள். வணிகம் செய்ய வந்த சகோதரர்கள், பட்டியம்மாவைப் பார்த்திருக்கிறார்கள். அண்ணன் பெயர் பெரிய அவனாசி; தம்பி பெயர் சின்ன அவனாசி. பட்டியம்மாளைப் பார்த்ததுமே விருப்பம் கொண்டு, அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என எண்ணினார் சின்ன அவனாசி. பட்டியம்மாள் வீட்டிலும் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். பட்டியம்மாளின் அண்ணன்மார், தாங்கள் பார்த்து வந்த கடவூர் ஜமீன் அரண்மனைக் காவலாள் பணியைச் சீதனமாகவும், மேலும், பொன்னும் பொருளும் தந்து தங்கையை மணமுடித்து வைத்தனர். சின்ன அவனாசி மனைவியோடு பாளையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோட்ட நத்தம் கிராமத்தில் குடியேறினார்.

தம்பியுடன் பெரிய அவனாசியும் வாழ்ந்து வந்தார். சின்ன அவனாசி தான் பார்க்கும் காவல் பணியைப் பெரிய அவனாசியோடு பகிர்ந்து கொண்டார். இருவரும் சேர்ந்து ஜமீன் காவல் பணியைச் செய்து வந்தார்கள். நாள்கள் கழிந்தன. அண்ணனுக்குத் தம்பியின் சொத்தின் மேல் ஆசை வந்தது. அடிக்கடி சகோதரர்கள் இருவருக்கும் சண்டை மூண்டது. தம்பி மீது வீண்பழி சுமத்தக் காத்திருந்தார் அண்ணன்.

ஒரு நாள் ஜமீன் அரண்மனையில் இருந்த ஒரு குதிரையை இரவோடு இரவாகத் திருடி விட்டார் பெரிய அவனாசி. அது சின்ன அவனாசி காவல் பணியில் இருந்த நேரம். காலையில் சின்ன அவனாசி எழுந்து பார்த்தபோதுதான் குதிரையைக் காணவில்லை என்பது தெரிந்தது. செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனாலும் விஷயத்தை ஜமீனிடம் தெரிவித்தாக வேண்டுமே!

நேரே ஜமீன்தாரிடம் போனார். “ஐயா… நம் ஜமீனில் ஒரு குதிரையைக் காணவில்லை. அரண்மனை முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன்’’ என்று பதற்றத்துடன் சொன்னார். என்ன சமாதானம் சொன்னாலும் ஜமீன் மனமிரங்கவில்லை. “இன்று மாலைக்குள் அந்தக் குதிரையுடன் நீ வரவில்லையென்றால், உனக்கு மரண தண்டனை விதிக்கப்படும்’’ என எச்சரித்து அனுப்பினார்.

சின்ன அவனாசி நொந்து போய் வீடு திரும்பினார். விஷயத்தைப் பட்டியம்மாளிடம் சொல்லிவிட்டு, ஊர் முழுக்கத் தேடினார். எங்கு தேடியும் குதிரை கிடைக்கவில்லை. சோர்ந்து, களைத்து அரண்மனைக்கு வந்தார் சின்ன அவனாசி. ஜமீனிடம் குதிரை கிடைக்கவில்லை என்ற விவரத்தைக் கூறினார். ஜமீன்தார் உடனே அரசவையைக் கூட்டினார். சின்ன அவனாசிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கணவருக்கு மரண தண்டனை கிடைத்த செய்தி, பட்டியம்மாளுக்கு இடியாக விழுந்தது. அப்போது பட்டியம்மா மூன்று மாத கர்ப்பிணி. ஆனாலும், செய்வதறியாத பட்டியம்மாள், கணவர் பின்னே சென்றார். காவலாளிகளால் கைது செய்யப்பட்ட சின்ன அவனாசி இராமகிரி பட்டணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பட்டியம்மாளும் உடன் சென்றார். அங்கே பெருமாள் கோயில் ஒன்று உண்டு. அங்கே தலைவெட்டி சம்பா நாயக்கர்கள் முன்னிலை யேசு நாதரைச் சிலுவையில் அறைந்ததைப்போல ஒரு கல்குட்டையில், மரத்தடியில் சின்ன அவனாசிக்கு உயிருடன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதைப் பார்த்த பட்டியம்மாள் அப்படியே கீழே விழுந்தார். அழுது புலம்பியபடி, அரண்மனையை நோக்கி ஓடி வந்தார்.

நேரே அரண்மனை ஜமீனிடம் போனார். நீதி கேட்டார்… “ஐயா… என் கணவனைக் கொன்று விட்டீர்கள். இனி என் நிலை என்ன? கணவர் இல்லாமல், வயிற்றில் பிள்ளையுடன் நான் எப்படி வாழ்வேன்? என்னையும் கொன்று விடுங்கள். என் கணவன் சென்ற இடத்துக்கே நானும் சென்று விடுகிறேன்’’ என்று கதறியபடி சொன்னார் பட்டியம்மாள்.

ஜமீனோ, “உன் கணவன் தவறு செய்தான். தண்டனை வழங்கினேன். நீ எந்தத் தவறும் செய்யவில்லையே! நீ எதற்காக இறக்க வேண்டும்?’’ என்றார். பட்டியம்மாள் அழுதுகொண்டே நானும் என் கணவன் சென்ற இடத்துக்கே செல்ல வேண்டும். என்னால் அவர் இல்லாத இந்த உலகத்தில் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது’’ என்பதையே திரும்பத் திரும்பக் கூறினார். ஒரு கட்டத்தில் அவள் துன்பத்தையும் அழுகையையும் பொறுக்க மாட்டாத ஜமீன்,உன் விருப்பம் அப்படியானால், நிறைவேற்றப்படும். ஆனால், நீ கர்ப்பமாக இருக்கிறாயே… அதனால், உன் அண்ணன்மார் ஏழு பேருடன் ஏழு மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்து விட்டு வா. பிறகு வயிற்றிலுள்ள குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விடு. அதன் பிறகு உன் விருப்பம் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

பட்டியம்மாள், நீங்கள் கூறுவது அனைத்துக்கும் கட்டுப்படுகிறேன். ஆனால், என்னை எரிக்கும்போது, சந்தனக்கட்டை, குங்குமக்கட்டை வெட்டி அக்னியை மூட்ட வேண்டும். எனக்கு நீங்கள்தான் `கொள்ளிக்குச்சி’ தர வேண்டும். என் சொந்த ஊரான கோட்டநத்தத்தில்தான் நான் இறக்க வேண்டும்’’ என்றார். ஜமீன் அந்தக் கோரிக்கைக்கு உடன்பட்டார். பட்டியம்மாள் ஒவ்வொரு மாதமும் ஓர் அண்ணன் வீட்டில் இருப்பார். அண்ணனிடம் விடைபெறும் கடைசி தினத்தன்று, ஒரு சீலையை அண்ணனிடம் கொடுப்பார்.அண்ணா… நான் இறந்த பிறகு இந்தச் சீலையை வைத்து, அதன் மேல் எலுமிச்சைப் பழத்தையும் மல்லிகைப் பூவையும் வைத்துக் கும்பிடுங்கள்’’ என்று சொல்லி கதறி அழுது விடைபெறுவார். இப்படி ஆறு அண்ணன்கள் வீட்டிலும் இருந்து விட்டார் பட்டியம்மாள். ஏழாவது அண்ணன் வீட்டுக்குச் சென்றார். அண்ணன் நல்லவன். அவன் மனைவி பட்டியம்மாளைத் துன்புறுத்தினாள்; கொடும் வார்த்தைகளால் கஷ்டப்படுத்தினாள். பட்டியம்மாள் நிறைமாத கர்ப்பிணி. ஆறு அண்ணன்கள் வீட்டிலும் வண்ணச் சீலைகளைக் கொடுத்தவள், ஏழாவது அண்ணனுக்கு வெள்ளச்சீலை கொடுத்தாள். அது கூரைப்பட்டு வேறு. தந்தவள் எப்போதும் சொல்லும் நடைமுறையையும் சொன்னாள்.

பத்து மாதங்கள் ஆகின. அண்ணன்கள் எழுவரியும் அழைத்தாள். `அண்ணா நான் இறக்கும் தருணம் வந்துவிட்டது’’ என்றாள். அண்ணன்கள் கதறி அழுதார்கள்.நான் கொடுத்த சீலையை நீங்கள் நல்ல நாள், திருமணச் சடங்குகளின்போது படைக்க வேண்டும். உங்கள் வீட்டு மணமகள் வெள்ளைச் சீலை கட்டித்தான் தாலி கட்ட வேண்டும்’’ என்று கூறி விட்டு, தன் சொந்த ஊருக்கு நடை பயணமாக வந்து சேர்ந்தாள் பட்டியம்மாள்.

பட்டியம்மாளுக்காக சந்தனக்கட்டை, குங்குமக்கட்டைகளை வெட்டி அடுக்கும்போது அவருக்கு இடுப்புவலி வந்தது. ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தையை ஊரிலுள்ள முக்கியமான ஒருவரிடம் பச்சை வாழையிலையில் வைத்துத் தந்தாள். அந்த நேரத்தில் பெரிய அவனாசி குற்றவுணர்ச்சி தாங்காமல், நான்தான் குதிரையைத் திருடிய பாவி!’’ என்று ஜமீனிடம் போய் உண்மையை ஒப்புக் கொண்டார். `நீதி தவறிவிட்டோமே...’ என்கிற வேதனையில் ஜமீன், பட்டியம்மாள் நெருப்பில் ஏற இருந்த இடத்துக்குப் பெரிய அவனாசியுடன் விரைந்து சென்றார். ஆனால், பட்டியம்மாள் அக்னியில் இறங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். பெரிய அவனாசியைப் பார்த்துநான் சாபம் விட்டால், உன் குடியில் ஒருவரும் இருக்க முடியாது. நாசமடைந்துதான் நீ போக வேண்டும். என் கணவனின் வாழ்வோடு என் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டாயே… என் கணவர் உன்னை என்ன செய்தார். அடே பாவி… என் கணவருக்கு `திருடன்’ பட்டம் வேறு கட்டிவிட்டாயே… நான் இறந்த பிறகு நீ எங்களோடு வாழ வேண்டும் என்று விரும்பினால், குயவர் வீட்டில் வேகாத பானை எடுத்துச் சமைத்து, அதை உண்டுவிட்டுச் செல். உனக்குப் பங்கு, பாவனை உண்டு. நீ தான் எங்களை ஏமாற்றினாய். நாங்கள் உன்னை ஏமாற்ற மாட்டோம்’’ என்று கூறி விட்டு ஜமீனிடம் கொள்ளிக்குச்சி கேட்டார் பட்டியம்மாள். அவர் குற்றவுணர்ச்சியில் தருவதற்கு மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழமும் மல்லிகைப் பூவும் கொடுத்தார். பட்டியம்மாள் அதை வாங்கித் தன் மடியில் கட்டிக்கொண்டு, ஊர் மக்களிடம் அழுதுகொண்டே “என் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் இறந்த பிறகு, அவனுக்கு நீங்கள்தான் தாய், தந்தை’’ என்று சொல்லிவிட்டு அக்னியை வளர்த்து, இடமும் வலமாகச் சுற்றி வந்து, அக்னிக்குள் இறங்கி விட்டார். அந்த அக்னியிலேயே உயிர் நீத்தார். அதன் பிறகு பட்டியம்மாளின் குழந்தையை வளர்த்து ஆளாக்கினார்கள்.

அன்னை பட்டியம்மாள் இறந்த இடத்திலிருந்து ஒரு கல்லைக்கூட எடுக்க முடியாது. அதையும் மீறி ஒரு மாட்டு வண்டிக்காரர் தன் வண்டியில் கல்சுமை போதவில்லை என்று அந்த இடத்தில் கிடந்த கல்லைத் தூக்கி வண்டியில் வைத்துச் சென்றிருக்கிறார். சிறிது தூரம் சென்றவுடன் மாட்டின் வாயிலிருந்து நுரை தள்ள ஆரம்பித்திருக்கிறது. பாரம் தாங்காமல், மாடு படுத்து விட்டது. மாட்டுவண்டிக்காரர் சந்தேகப்பட்டு தான் எடுத்த அந்தக் கல்லை மட்டும் அந்த இடத்திலேயே போட்டு விட்டார். மாடு எழுந்து கொண்டது. அவர் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்தபோது அந்தக் கல்லை போட்ட இடத்தில் காணவில்லை. ஆச்சர்யத்தில் உறைந்தவர், பட்டியம்மாள் இறந்த இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கு அந்தக் கல் கிடந்தது. தான் செய்த செயலை எண்ணி வருந்தினார் வண்டிக்காரர். அன்னையிடம் தவறுக்கு மன்னிப்புக் கேட்டு அழுது புலம்பினார்’’ என்று வரலாற்றை விவரித்தார் சுப்ரமணியன்.

அன்னை பட்டியம்மாள் இறந்த இடத்தில் உருவம் எதுவும் வைக்கப்படவில்லை. சிறிய கம்பி வேலி. உள்ளே ஒரு கிளிக்கூண்டுபோல சின்ன பீடம்தான். இங்கேதான் சக்தியின் அவதாரமாக சீலைக்காரி அம்மன் விளங்கி, அந்தப் பகுதி மக்களுக்கு அருள்பாவிக்கிறாள். வரும் பக்தர்களுக்கும் அருள்பாவிக்கிறாள். வரும் பக்தர்கள் அங்கிருக்கும் மண்ணைத்தான் திருநீராகப் பூசிக்கொள்கிறார்கள்.

பட்டியம்மாளின் ஏழு அண்ணன்மார் வீட்டிலும் அந்தப் பெண்ணுக்கு என்று தனியாகக் கோயில்கட்டி வழிபடுகின்றனர். பொங்கல் திருநாள் அன்று அண்ணன் வீட்டுக்கு வந்து, முறைப்படி பங்கு வாங்கிக் கொண்டுதான், சீலைக்காரி அம்மன் இறந்த இடத்தில் இரவில் பழ பூஜை போடுகிறார்கள். காலையில் அக்னியை வளர்க்கிறார்கள். அந்த வீட்டிலுள்ள பெண் மேல் அருள் வருகிறது. அந்தப் பெண் வெள்ளைச் சீலை உடுத்தி, அக்னியை அள்ளி மடியில் கட்டிக்கொண்டு, கையில் எலுமிச்சைப் பழமும், மல்லிகைப்பூவும் எடுத்துக்கொண்டு பட்டியம்மாள் இறந்த இடத்தை அழுதுகொண்டே இடமும் வலமுமாகச் சுற்றி வந்து, தனது மடியிலுள்ள நெருப்பைக் கீழே உதறிவிட்டு, தனது முந்தானையை அங்குள்ள மக்களிடம் காட்டுகிறார். அந்தச் சீலையில் ஒரு நெருப்புக்கூட இருப்பதில்லை. சீலையில் தீயும் பற்றுவதில்லை. சீலைக்காரி அம்மனை வேண்டினால், வேண்டும் வரம் தருவாள் என நம்புகிறார்கள் மக்கள்.

  • வேளாளர் மையம்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: