பெரியவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை கேட்ட தனித் தொகுதி.
தேர்தலில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும் எனப் பெரியவர் கேட்டிருக்கிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நம்பவே மாட்டார்கள். ஆனால், கேட்டிருக்கிறாரே?.
முகம்மது அலி ஜின்னா போன்றவர்கள் தங்களது இஸ்லாமிய மதத்தினருக்காகத் தனித்தொகுதி கேட்டிருக்கிறார்கள்.
அதைப்போல சைவ சமயத்தில் பிறந்த பெரியவரும் சைவ சமயத்தினருக்காகவோ அல்லது ஹிந்துக்களுக்காகவோ தனித்தொகுதி கேட்டிருப்பாரோ?.
1981இல் அயோத்தி தாசரும் ரெட்டைமலை சீனிவாசனாரும் திராவிட மகாஜன சபை மாநாட்டில் தாங்கள் பிறந்த சாதியினருக்காகத் தனித்தொகுதி கேட்டுத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். அப்புறம் சென்னை மாகாணத்திற்குத் தேர்தலை நடத்திய வெள்ளைக்காரன் தான் நியமிச்ச 29 எம்.எல்.ஏக்களில் 5 தொகுதியைத் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கென்று ஒதுக்கியிருக்கிறான். சொல்லப் போனால், அப்போது எல்லோருக்கும் ஓட்டுரிமையும் கிடையாது. அதன்பின்னர் அம்பேத்கர் தனது சாதியினருக்காகத் தனித்தொகுதிகளைக் கேட்டிருக்கிறார் என்பதை நாமறிவோம்.
அதைப்போல சைவ வேளாளர் சாதியில் பிறந்த பெரியவரும் சைவ வேளாளர் சாதியினருக்காகவோ அல்லது வேளாளர் சாதியினருக்காகவோ தனித்தொகுதி கேட்டிருப்பாரோ?.
ஆனால், பெரியவர் தான் பிறந்த சாதிக்காகவும் தனித்தொகுதியைக் கேட்கவில்லை. மதத்திற்காகவும் கேட்கவில்லை. அப்படியென்றால் வேறு யாருக்காகக் கேட்டார்?.
எப்போது கேட்டார் என்பதை முதலில் பார்ப்போம்.
1920இல் சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநில (Madras Provincial Congree) மாநாட்டிற்கான இருபத்தி ஆறாவது கூட்டத்தொடரில்தான் தனித்தொகுதி வேண்டும் என்பதை வெறும் கோரிக்கையாக அல்ல தீர்மானமாகவே கொண்டு வந்திருக்கிறார் பெரியவர்.
சரி, யாருக்காகத் தனித்தொகுதி கேட்டார்?.
1920ஆம் ஆண்டு முதன்முறையாக சென்னை மாகாண சட்டமன்றத்திற்காக நடைபெறவிருக்கின்ற தேர்தலில் அவர் தனித்தொகுதி கேட்டது, தொழிலாளர்களுக்காகவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்காகவும்தான்.
தொழிலாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தக்க எண்ணிக்கையில் தமிழக சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் எனும் தீர்மானத்தின் மூலமாகத் தொழிலாளர்களுக்கெனத் தனித்தொகுதி கேட்டிருக்கிறார்.
தொழிலாளிகளுக்குத் தனித்தொகுதி எனும் கோரிக்கையை இதற்குமுன் அல்லது பின்னருங்கூட யாராவது முன் வைத்திருக்கிறார்களா?.
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
நன்றி : சுதேசி செய்திகள்