வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) என்றழைக்கப்படுமிவர், தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.
தொழில்
1960-களில் மும்பை தொடருந்து நிலையத்தில் சுமைதூக்குக் கூலியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார். பின்னர், போதை பொருட்கள் கடத்தல் தொழிலும், மக்தா என்னும் சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இவ்வாறு படிப்படியாக வளர்ந்த வரதராஜன் பின்னர் கூலிக்கு கொலை செய்தல், கொள்ளை மற்றும் கடத்தல் என அனைத்திலும் ஈடுபட்டதின் விளைவாக 1980-களில் மிகப்பெரிய தாதாவாக உருவானார். இவர் 1980-களில், கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டார். கரீம் லாலா-விற்கு பிறகு மிகப்பெரிய சமூகவிரோதியாக விளங்கினார். அச்சமயத்தில், கரீம் லாலா, வரதராஜன் மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய மூவரும் மும்பையில் தாதாவாக திகழ்ந்தனர்.
ஆன்மீகம்
மாத்தூங்கா மற்றும் தாராவி பகுதிகளில் அதிகமான ஆதிக்கம் செலுத்தி வந்தார் வரதராஜன். இவர் மாத்தூங்கா பகுதியில் உள்ள கணபதி கோயிலில், விநாயக சதூர்த்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார்.
மரணம்
1980-களின் பிற்பாதியில் மும்பையில் அதிகப்படியான பஞ்சாலைகள் மூடப்பட்ட பிறகு இவருடைய செல்வாக்கும் குறையத்தொடங்கியது. 1980-களின் இறுதியில், இவர் சென்னைக்குத் திரும்ப வந்தார். 1988-ம் ஆண்டு தன்னுடைய 62-ம் அகவையில் காலமானார்
திரைப்படங்களில்
1987-ம் ஆண்டு, மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படத்தில், வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. கமல் ஹாசன் அக்கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தயவான் என்ற பெயரில் வினோத் கண்ணா நடிப்பில் இந்தியிலும் இப்படம் 21 அக்டோபர், 1988 அன்று வெளியானது.
தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த, அமிதாப் பச்சன் அவருடைய அக்னீபாத் திரைப்படத்திலுள்ள வசனங்கள் வரதராஜ முதலியார் பயன்படுத்தியதில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறினார்.