வி. எஸ். துரைராஜா (V. S. Thurairajah, ஆகத்து 8, 1927 – திசம்பர் 14, 2011) இலங்கையின் ஒரு புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், தமிழார்வலரும் ஆவார். கட்டிடக்கலை தொடர்பான பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இலங்கையின் பல இடங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், மற்றும் முக்கிய அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. இவை தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் இவர் பல கட்டடங்களை அமைத்துக் கொடுத்துள்ளார். ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பில் வெளிவந்தது.
வாழ்க்கைக் குறிப்புகள்
யாழ்ப்பாணத்தில் நவாலியில் வேலுப்பிள்ளை சுப்பையா, தங்கச்சிமுத்து ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தவர் துரைராஜா. தனது 6வது வயதிலேயே தந்தையை இழந்தார். மானிப்பாய் கிறீன் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சர் ஜேஜே கலைக் கல்லூரியில் மூன்றாண்டுகள் கட்டிடக்கலை பயின்று பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி 1951 இல் பொதுப்பணித் துறை அமைச்சில் கட்டிடக்கலைஞராகப் பணியைத் தொடங்கினார். 1954 இல் கொழும்புத் திட்டப் புலமைப் பரிசில் பெற்று லண்டன் சென்று உயர் கல்வியைக் கற்று மீண்டும் இலங்கை திரும்பிப் பணியாற்றினார்.
அரசுப் பணியாலர்கள் அனைவரும் சிங்களத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்ததால், துரைராஜா அரசுப் பணியில் இருந்து விலகி, 1964 ஆம் ஆண்டில் துரைராஜா அசோசியேட்ஸ் என்ற கட்டிட வடிவமைப்பு ஆலோசக நிறுவனத்தை ஆரம்பித்து நிர்வகித்து வந்தார்.
ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத்தூபி, யாழ் பல்கலைக்கழகக் கட்டடங்கள் போன்ற பல கட்டடங்களை வடிமைத்துள்ளார்.
1974 ஆம் ஆண்டில் நடந்த 4வது தமிழாராய்ச்சி மாநாட்டு அமைப்புக்குழுவில் உறுப்பினராக இருந்தவர். யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டபின்பு மீளக்கட்டியெழுப்புவதில் சிரத்தையுடன் பணியாற்றிய துரைராஜா “யாழ் பொதுநூலகம் அதன் சாம்பலில் இருந்து எழுகின்றது” (The Jaffna Public Library Rises From Its Ashes) என்ற நூலையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். பல அரிய படங்கள், வரைபடங்கள், தகவல்கள் அடங்கிய இந்த நூல், 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூல் காவலூர் ராசதுரையினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
திரைப்படம் தயாரித்தல்
யாழ்ப்பாணத்துக்குரிய சமூகப் பிரச்சினைகளை முன் வைத்து யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் 1972 ஆம் ஆண்டில் குத்துவிளக்கு என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தின் பிரதியை இறுவட்டு வடிவில் 35 ஆண்டுகளின் பின்னர் வெளியிட்டார். இத்திரைப்படத்தின் வரலாற்றை தம்பிஐயா தேவதாஸ் “குத்துவிளக்கு – மீள்வாசிப்பு” என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டார்.