திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது பாச்சலூர் மலை கிராமம். இங்குள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மூன்று பெண் ஆசிரியைகள், மூன்று ஆண் ஆசிரியைகள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பாச்சலூர் கிராமத்தில் வேளாளர் குடியை சேர்ந்த சத்யராஜ் – பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மூவரும் இதே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல மூவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர். பள்ளியின் இடைவேளை நேரத்தில் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகளான 11 வயது சிறுமி பள்ளியின் கழிவறைக்கு சென்றதாகவும், மதிய உணவு இடைவேளை வரை அவர் வெளியே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தங்கையை காணவில்லை எனக்கூறி 6ம் வகுப்பு மாணவி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகள், வீட்டுக்கு சென்று தங்கையை காணவில்லை என என்று தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் தேடிய போது காணாமல் போன சிறுமி பள்ளியின் பின்புறம் எரிந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. விஷயம் பள்ளிக்கும், கிராம மக்களுக்கும் தெரிய வந்ததையடுத்து, அச்சிறுமியை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமி எரிக்கப்பட்ட இடத்தில் தீப்பெட்டி, பெட்ரோல் கேன் மற்றும் சிறுமியின் வாயை துணியை வைத்து அடைக்கப்பட்டும் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோரும், கிராம மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தாண்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனக்கூறி பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பள்ளியில் சம்பவத்தன்று இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்கும் வரையில் மகளின் உடலை வாங்கமாட்டோம் என்று பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர விசாரணைக்கு பிறகு சிறுமியை கொன்றவர்கள் யார்? அவரை எதற்காக கொன்றார்கள் என்ற தகவல் வெளிவரும்.
நன்றி :சமயம் தமிழ்