கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.வேலூரில் ‘14567’ என்ற முதியோர்களுக்கான விழிப்புணர்வு உதவி எண் மற்றும் 181 என்ற பெண்களுக்கான விழிப்புணர்வு உதவி எண் ஆகியவற்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழ்நாட்டில் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரை, ஒரு கோடியே 13 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முத்ரா யோஜனா திட்டத்தில் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3 கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் பயன் அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 லட்சம் பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 2015 ஆண்டு முதல் இதுவரை கிராமப்புறங்களில் 5 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கும் நகர்ப்புறங்களில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கும் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில் தமிழ்நாட்டில் ரூபாய் 4 ஆயிரத்து 87 கோடி மதிப்பீட்டில் இதுவரை 39 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
கலப்பு திருமணங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருகிறது. கலப்புத் திருமணம் செய்பவருக்கு இரண்டரை லட்சம் நிதி உதவி மத்திய அரசு வழங்கி வருகிறது.தமிழக அரசு சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஏக்கர் நிலங்களை வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,’என்று தெரிவித்தார்.
நன்றி : தினகரன்