வெள்ளக்கால் பழனியப்ப சுப்பிரமணிய முதலியார் (வெ.ப.சு, ஆகத்து 14, 1857 – அக்டோபர் 12, 1946) கால்நடை மருத்துவர். அம்மருத்துவ நூல்களைத் தமிழில் முதன்முறையாக மொழிபெயர்த்தவர். தமிழ்ப் புலவர்.
பிறப்பு
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1857 ஆகத்து 14 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் வெள்ளக்கால் என்னும் ஊரில் பழனியப்ப முதலியாருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் நெல்லை அரசரடி கிறித்துவ மிஷன் பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். நெல்லையில் உள்ள ம. தி. தா. இந்து கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேஷன் தேறினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். பிறகு சைதாப்பேட்டையில் இருந்த அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884 ஆம் ஆண்டில் ஜி. எம். ஏ. சி. என்னும் வேளாண்மையில் பட்டம் பெற்றார்.
பணி
1895 ஆம் ஆண்டில் முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராகவும் 1911 ஆம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார்.
இயற்றிய நூல்கள்
பின்வரும் நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
- அகலிகை வெண்பா (246 வெண்பாக்கள்)
- இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்
- நெல்லைச் சிலேடை வெண்பா
- தனிக்கவித்திரட்டு (இத்தொகுப்பு மடக்கு, யமகம், திரிபு, சிலேடை முதலிய சொல்லணிகளும் பொருளணிகளும் கொண்டு எழுதப்பட்டது).
- கம்பராமாயண சாரம் (செந்தமிழ் இதழில் உரையும் கதைத் தொடர்ச்சியுமாக இதனை வெளியிட்டு வந்தார். 864 பாடல்களின் தொகுப்பு)
- கம்பராமாயணத்தையும் இராமாயணத்தையும் எரிக்கும் முயற்சி
- பகவத் கீதை (கும்மி)
மொழிபெயர்த்த நூல்கள்
- சுவர்க்க நீக்கம் – ஆங்கிலக் கவிஞர் மில்டன் எழுதிய Paradise Lost என்னும் ஆங்கிலப் பெருங்காப்பியத்தின் செய்யுள் மொழிபெயர்ப்பு – விரிவுரையுடன்.
- கோம்பி விருத்தம் ((மெரிக்கனார் எனும் ஆங்கிலப் புலவர் இயற்றிய செய்யுள் நூலின் மொழிபெயர்ப்பும் விளக்கமும்
- சருவ சன செபம் (சம்பத்துராய சைனர் எழுதிய “எதிரிடைகள் இசைவுறுதல்” என்ற நூலின் இறுதிப்பகுதியைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் உலகத்தோருக்குத் தேவையான பொதுவான நீதிகளை 137 அடிகளில் கூறுகிறது.)
- கல்வி விளக்கம் – ஏர்பாட் இசுபென்சர் எழுதிய ‘கல்வி’ எனும் நூலின் மொழிபெயர்ப்பு (1895)
- கால்நடைக்காரர்
- இந்திய கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள்
- இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம்
- இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகிற அதிக பிராணாபாயமான வியாதிகள்
- மிலிற்றனார் சரித்திரம்
ஏனையவை
- ஆறுமுக நாவலர் சரித்திரம் (சிவகாசி அருணாசலக் கவிராயர் எழுதிய செய்யுள் நூல் பரிசோதிப்பு, 1898).
பொதுப்பணி
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 1916 ஆம் ஆண்டில் திருநெல்வேலி வட்டாட்சிக் கழகத்தில் உறுப்பினரானார். 1919 ஆம் ஆண்டில் அதன் துணைத்தலைவர் ஆனார். 1920 ஆம் ஆண்டில் அதன் தலைவராக ஆனார். 1922ஆம் ஆண்டில் தென்காசி நீதிமன்ற இருக்கையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பட்டம்
ஆங்கிலேய அரசிடம் ராவ் பகதூர் சாகிப் என்னும் பட்டத்தை 1926ஆம் ஆண்டு பெற்றார்.
மறைவு
இவர் 1946 அக்டோபர் 12 ஆம் நாள் மறைந்தார்.