ஜார்கண்ட் மாநில அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரிக்கையை முன் வைத்தனர்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நிர்வாக ரீதியாக சிக்கலானது மற்றும் தாமதம் ஏற்படுத்தும் ஒன்று என மத்திய அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர், பா.ஜ.க., மாநில தலைவர் தீபக் பிரகாஷ் எம்.பி., உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் இன்று (செப்., 26) டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி வலியுறுத்தினார்கள்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் அமித்ஷாவிடம் வழங்கினார். அக்கடிதத்தில் பா.ஜ.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் கையெழுத்திட்டனர். அக்கடிதத்தில், “சுதந்திரத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதித் தரவு இல்லாததால், பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாது என பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது துரதிர்ஷடசமானது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இது நியாயமற்றது.” என குறிப்பிட்டுள்ளனர்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் வந்திருந்த பா.ஜ.க., தலைவர் தீபக் பிரகாஷ், ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு நேரடி பதிலளிப்பதை மறுத்துவிட்டார். மேலும் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் விரும்புபவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மோடி அரசு ஓ.பி.சி., கமிஷனுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி.,க்கு 27% ஒதுக்கீட்டை வழங்கியது. பா.ஜ.க., அரசு பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது. என கூறினார்.
நன்றி : தினமலர்