சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தாருங்கள் :சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 33 தலைவர்களுக்கு தேஜஸ்வி கடிதம்

0
431
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal


நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். எனினும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு ஏற்கனவே கூறியிருந்தது. அதனையே, கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்திலும் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. எனினும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக தனது மாநிலத்தை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடியை சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த, ஒன்றிய அரசிடம் வலியுறுத்தக் கோரி பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் (லாலு மகன்), தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 13 மாநில முதல்வர்கள் மற்றும் 33 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் நகலை அவரே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘சமூக – பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான காலம் மற்றும் தேவை ஏற்பட்டுள்ளது.

ஆளும் ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுத்துள்ளது. சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை, தேசிய அவசியமாக பார்க்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என்பதற்கு அழுத்தமான காரணம் இல்லை. இதுதொடர்பாக 13 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் 33 முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். அதில், பெரும்பான்மையினரின் பொதுவான கவலையை எனது எழுத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தலைவர்களின் பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, என்சிபி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பிஎஸ்பி தலைவர் மாயாவதி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா ஆகிய தலைவர்களின் பெயரும், மாநில முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராயி விஜயன், ெடல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோரின் பெயர்கள் உள்ளன. பாஜக தவிர பிற கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த கடிதத்தை தேஜஸ்வி யாதவ் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினகரன்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: