கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மாபெரும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நகரும்புகைப்பட கண்காட்சி பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரத்தை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி செய்தித் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு வரலாற்றுத் தொகுப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, செய்தித் துறையால் பராமரிக்கப்படும் நினைவகங்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்படங்கள், சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட தியாகிகளின் அரிய புகைப்படங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவம் கொண்ட பழைய நாணயங்கள், அஞ்சல் தலைகள், பட்டயங்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
சுதந்திர தின விழா உரையில் முதல்வர் அறிவித்தபடி, வஉசிவாழ்க்கை வரலாற்றில் பொதிந்து கிடக்கும் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணரும் வகையில் போக்குவரத்து துறை உதவியுடன், உருவாக்கப்பட்டுள்ள ‘நகரும் புகைப்படக் கண்காட்சி’ பேருந்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இப்பேருந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கும் வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சிறுபான்மையின ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி : தி இந்து