சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி சர்வோதாயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் வேளாளர் ஐயா கோவை அய்யாமுத்து கவுண்டர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

0
356
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

கோவை அய்யாமுத்து (C. A. Ayyamuthu) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக இருந்தார். இவரது ’எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

பிறப்பு

அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை அங்கண்ணன்; தாய் மாரம்மாள். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்தவர்.

அரசியல் ஆர்வம்

அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். அது அய்யாமுத்துவை கலையிலக்கிய தளம் நோக்கி ஈர்த்தது. மாணவராக இருக்கையில் வ. உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருத்தெருவாக இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார். 1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார்.

திருமணம்

1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்துகொண்டார்.

காந்தியத் தொண்டர்

1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் பொராட்டத்தில் பணியாற்றினர். இருவரும் 1923ல் கோவையில் குடியேறினார்கள். காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1931ல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச்செய்தார். அதிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார். இக்காலத்தில் ஈ. வே. ராமசாமியுடன் நட்புக்கொண்டார்.

தீண்டாமை எதிர்ப்பில்

1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார்.

கதர் வளர்ச்சி

1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார். 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். கதர் அய்யாமுத்து என்று அவரை அக்காலகட்டத்தில் அழைத்தார்கள்.

சிறை வாழ்க்கை

1932ல் காந்தி சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அய்யாமுத்துவின் மனைவி. கிட்டத்தட்ட ஆறாண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் இருந்திருக்கிறார் அய்யாமுத்து.

நாடகத்துக்குத் தடை

இவர் எழுதிய நச்சுப்பொய்கை அல்லது நாரியர் வேட்கை என்னும் நாடகத்தை மதுரை தேவி பாலவிநோத சபை நிகழ்த்தக்கூடாது என்று 1934ஆம் ஆண்டில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தடைவிதித்திருந்தார். அதனை 1934 செப்டம்பரில் திரும்பப்பெற்றார்.

விடுதலைக்குப்பின்

சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். ராஜாஜியின் அரசியல் வழியை பின் தொடர்ந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967 வரை சுதந்திராக் கட்சியில் பணியாற்றினார்.

இதழ்

கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார்.

காந்தி பண்ணை

1951ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.

மறைவு

மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்.

படைப்புகள்

  1. அக்காளும் தங்கையும்
  2. இராமசாமியும் கதரும்
  3. இராஜபக்தி
  4. இன்பசாகரன் (நாடகம்)
  5. எனது நினைவுகள்

திரைப்படம்

இவர் எழுதி இயக்கிய திரைப்படம் கஞ்சன் (1947) ஆகும்.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: