எழுத்திலே உயிர் எழுத்தென்றும் மெய் எழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே அல்லாமல் பிறர் அல்லர். எழுத்திலே 12 உயிர், 18 மெய். இதனை அறிந்தவர்கள் தமிழர்கள். மொழியை வளப்படுத்தும் வழி தெரிந்தவர்கள் தமிழர்களே. Dr.Bain என்ற ஆசிரியர் இதை ஒப்புக் கொண்டு குறிப்பிட்டிருக்கிறார். ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன் முதலில் இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது.
தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. அகரத்தைப் பற்றித் தொல்காப்பிய ஆசிரியர் முறைப்படி காட்டியிருக்கிறார். ஓசையை அறிந்ததும் அதனை எழுத்து வடிவிலே கொணர்ந்து நெடுங்கணக்கிட்ட பெருமை தமிழர்களுக்கே உரியது. வேறு எவர்க்கும் உரியதன்று.
எழுத்துக்களை ஒலியெழுத்தென்றும், வரியெழுத்தென்றும் பிரித்தவர்கள் தமிழர்களே. தொல்காப்பியம் என்னும் அரிய நூல் 5000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிராவிட்டால் இவைகளையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்கு வழி இல்லை. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று தமிழர்கள் இலக்கணத்தை 5 பகுதிகளாக வகுத்துள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகத்திணை, புறத்திணை என்பது பற்றித் தொல்காப்பியனார் விளக்கினார். தொல்காப்பியரிடம் எவ்விதக் குறைபாடும் இல்லை.
எதையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிற அறிஞர்கள் பழங்காலத்திலே இருந்தார்கள். இப்பொழுது நம் நாட்டில் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள் குறைவு. அறிஞர்கள் எல்லாரும் தொல்காப்பியர் கருத்தை ஒத்துக் கொள்வார்கள். தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ்நாட்டிலே அதிகம். இது தமிழர்களுக்கு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர்கள் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது.
தொல்காப்பியரைப் பற்றி இங்குப் பேசவேண்டுமென்கிற ஆர்வம் எனக்குண்டு. பயிர் நூலைப் பற்றியும் (Botany), உயிர் வகைகளைப் பற்றியும் (Zoology), தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். எந்தப் பயிர் எந்த நிலத்தில் வளரும்? எந்தப் பறவைகள் எந்த நிலத்தில் வாழும்? எந்த நிலத்தில் மக்கள் தொழில் செய்யலாம்? எது நாகரிகம்? என்பது பற்றியெல்லாம் தொல்காப்பியர் சொல்லியிருக்கிறார். உலகத்திலே கண்டறியப் படுகின்ற Geology பற்றியும் தொல்காப்பியத்திலே காணலாம்.
ஒன்றை நூறாக, நூறை ஆயிரமாக, ஆயிரத்தைப் பதினாயிரமாகச் செய்ய வேண்டும். அப்படி நாம் செய்தோமா? தொல்காப்பியருக்குப் பின் யாராகிலும் அப்படி வளர்த்தார்களா? இல்லையே! தொல்காப்பியத்தை நாம் எடுத்துப் பார்ப்போமானால் மொழியிலே ஓசை மிகப்படும் எண்ணத்தைப் வழிபடுத்தியிருக்கும் தமிழ்ச் சொற்களைக் காணலாம். தமிழுக்குப் புறம்பான மொழிகளை ஆராய்ந்து சொல்லுகிறேன். தமிழுக்குள்ள சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) இன்று பிறந்த தினம்!
(10.4.1949இல் சென்னை சைதைத் திருவள்ளுவர் செந்தமிழ்ச் சிவநெறிக் கழகம் சார்பில், சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில், “தமிழின் தனிச் சிறப்பியல்புகளும்- தமிழர் கடமைகளும்” எனும் தலைப்பில் மறைமலையடிகள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.)