கோவை செழியன் (Kovai Chezhiyan) என்பவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.
திரைத்துறையில்
இவர் எம். ஜி. ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், முத்துராமன், என்டிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், ராஜேஷ் கண்ணா, மம்முட்டி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களை வைத்து படங்களைத் தயாரித்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த செழியன், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் தயாரித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முதல் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் இதற்கு முன் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் கெளரவ செயலாளராக இருந்தார். அரசியலில் ஈடுபட்டு பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். திமுகவின் மாவட்டச் செயலாளராகவும், கொங்கு மண்டல திராவிட இயக்கத் தலைவராகவும் இருந்தவர்.[
பின்னர் இவர் தனது நண்பரான கவிஞர் கண்ணதாசனால் தயாரிப்பாளராகத் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் ஆரம்பத்தில் கண்ணதாசனுடன் சேர்ந்து படங்களைத் தயாரித்தார். பின்னர் ஸ்ரீதர் இயக்கிய சுமைதாங்கி திரைப்படத்தினை தனியாகத் தயாரித்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களைத் தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.
அரசியல் வாழ்வு
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் தலைவர் கோவை செழியன் ஆவார். இவர் 1971-ல் காங்கேயம் சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுத் தலைவராகவும் இருந்தார். இவரது வாழ்வின் பிற்பகுதியில் கொங்கு மண்டல மக்கள் மற்றும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட சமூக அங்கிகாராத்தினைத் தனது சகாக்களுடன் சேர்த்துப் பெற்றுத் தந்த முக்கிய நபர்களில் இவரும் ஒருவர்.
வாழ்க்கையும் குடும்பமும்
இவர் மார்ச் 14, 2000 அன்று இறந்தார். 2000ஆம் ஆண்டில் இவர் இறந்த பிறகு, கொங்கு வெள்ளாள கவுண்டர் பேரவை அவரது பிறந்தநாளில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே குங்கருபாளையத்தில் நினைவகம் மற்றும் வளைவைக் கட்டினார். இவரது மரணத்தைத் தொடர்ந்து, இவரது மகன் கபிலன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றார். இருப்பினும், 2000ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கார்த்திக் நடிப்பில் ஒருவர் மனதில் ஒருவரடி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறைவுபெறாமல் உள்ளது. கோவை செழியனின் மனைவி கமலம் செழியன் வயது முதிர்வு காரணமாக ஏப்ரல் 24, 2021 அன்று காலமானார்.
திரைப்படவியல்
- சுமைதாங்கி (1962)
- ஊட்டி வரை உறவு (1967)
- குமரி க்கோட்டம் (1971)
- உழைக்கும் கரங்கள் (1976)
- சர்க்கசு ராமுடு (1980)
- சந்தமாமா (1982)
- ஆசா ஜோதி (1984)
- எனக்கு நானே நீதிபதி (1986)
- மௌனம் சம்மதம் (1990)
- அழகன் (1991)
- புதையல் (1997)