கொங்கு வேளாளர் கல்வெட்டுக்கள் சிலவற்றில் பறையன் என்ற சொல் கொங்கு வேளாளர் பெயரோடு இணைந்து வருவதைக் காணலாம். இதை மேலோட்டமாகப் பார்த்த தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் இருபெரும் சமூகத்தையும் ஒன்றுபடுத்திக் கூறியுள்ளார்.
திருமுருகன் பூண்டியில் உள்ள கொங்கு மன்னன் விக்கிரமசோழனின் 12 ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடை கொடுத்தவர் பெயர் “வெள்ளாளர் மாப்புள்ளிகளில் சோழன் பறையன் ஆன தனபாலன்” எனக் குறிக்கப்பெறுகிறது. இவர் திருமுருகன் பூண்டிக் கோயிலுக்கு நாள்தோறும் அமுதுபடிக்காக நாழியரிசி கொடையாகக் கொடுத்துள்ளார்.
அதனை கோயில் காணியுடைய சிவப்பிராமணர்கள் பெற்றிருக்கின்றனர். இப்பெயரில்,
சமூகப் பெயர் – வெள்ளாளன்
குலப்பெயர் – மாப்புள்ளி
இயற்பெயர் – தனபாலன்
வெள்ளாளரில் மாப்புள்ளி குலம் சேர்ந்த தனபாலன் சோழன் பறையன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுள்ளான். அரசால் அல்லது சபையால் அல்லது ஊராரால் அவன் சோழன் பறையன் என ஆக்கப்பட்டுள்ளான் என்பதை ஆன என்ற சொல் விளக்குகிறது. பறையன் என்பது இங்கு அரசு சார்ந்த ஒரு பட்டப்பெயரே தவிர இயற்பெயர் அல்ல.
சோழன் புகழைப் பரப்புபவனாகவோ அல்லது பறை முதலிய கருவிகள் இயக்கத்தின் தலைவனாகவோ அவன் இருக்கலாம். உடுமலை வட்டம், சோழமாதேவியில் இதே விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சியாண்டுக்கல்வெட்டில் தன் சிறிய தாயாருடன் சேர்ந்து கோயிலுக்கு நிலைகால் அளித்த பெண்ணின் பெயர் “பறையன் ஆளுடைய நாச்சி” என்பதாகும்.
எனவே பறையன் என்பது சோழர் காலத்தில் கொடுக்கப்பட்ட உயர்பட்டப் பெயர் என்று தெரிகிறது. அது குலப்பெயர் அல்ல.