1778ஆம் ஆண்டு துவங்கி 1792ஆம் ஆண்டு வரையிலான பிரஞ்சு துபாசி (இன்னறை அரசு தலைமை செயலர் பதவி போல ) வீராநாயக்கரின் நாட்குறிப்பு புதுச்சேரி வாழ் சாதிகளை அறியப் பெரிதும் உதவுகிறது. மேலும் சாதிகளுக்கிடையே உள்ள தொடர்பு, முரண்பாடுகள் போன்ற செய்திகளும் இடம் பெறுகின்றன. சாதிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேளாளர், கோமுட்டி, கைகோளர், செட்டி, கருமர், அகம்படையர், முதலி, நாயக்கர், சாடர், கவரை, பரையர், சக்கிலியர், இடையர், மேளக்காரர், காசுக்காரர், பவளக்காரர் எனப் பல சாதிகளைப் பற்றிய பதிவுகள் இந்நாட்குறிப்பில் உள்ளன.
இச்சாதிகள் வலங்கை சாதி, இடங்கை சாதி எனவும் பிரிக்கப்பட்டிருந்தன. பொதுவாக வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரைத் தமக்குக் கீழ்ப் பட்டவர்களாகவே கருதினர்.
சில நேரங்களில் வலங்கை சாதியினர் பெறும் உரிமைகளை இடங் கையினர் கோரும்போது முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன.
நாட்குறிப்பின்படி மேளக்காரர், செட்டி, கம்மாளர், கருமர், சக்கிலி போன்றவர்கள் இடங்கை சாதியினர் என்றும் பிள்ளை, கவரை, கோமுட்டி, கைகோளர், முதலி, அகம்படையர் பறையர் போன்றவர்கள் வலங்கை சாதியினர் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் வீராநாயக்கர் மார்ச் மாதம் 2-ஆம் தேதி 1785ஆம் ஆண்டு நாட்குறிப்பில் வலங்கை, இடங்கை சச்சரவைத் தீர்க்கும்படியான பொறுப்பு ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பி மகனான ரங்கப்ப திருவேங்கடம் பிள்ளையிடம் கொடுக்கப்பட்டதாகப் பதிவு செய்கிறார்.
சாதிகளின் நடமாட்ட உரிமையும், மறுப்பும்:
பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சியில் புதுச்சேரி அழகும், பொலிவும் பெற்றது எனலாம். பிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற நேரான, சரியாகப் பராமரிக்கப்பட்ட சாலைகள் இருந்தன. ஆயினும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வரும் சாலை, சாவடித்தெரு, இன்னும் சில தெருக்கள் மட்டுமே பொதுவழிகளாகக் கருதப்பட்டன. மற்ற அனைத்துத் தெருக்களும் சாதியின் பெயரைக்கொண்டு வழங்கப் பட்டன. உதாரணமாக, வெள்ளாளத்தெரு, பிராமணத் தெரு, பள்ளத்தெரு, செட்டித்தெரு, யாதவர் தெரு, கோமுட்டித்தெரு, முதலித்தெரு, கைகோளர் தெரு போன்றவற்றைக் கூறலாம். பெரும்பாலும் மக்கள் அவரவர் சாதியின் தெருக்களிலேயே குடியிருந்தனர்.
ஒரு சாதியினரின் தெருவுக்குள் மற்ற சாதியினர் செல்லும்போது சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. குடை யுடன் செல்லும்போதும், திருமண ஊர்வலங்கள் செல்லும்போதும் மற்ற சாதியினரை மதிக்காததாகக் கருதப்பட்டது.
1785ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி நாட் குறிப்பின்படி வரதராச பெருமாள் கோயில் தேர் இடங்கை சாதியினர் தெருவுக்குள் செல்லக் கூடாது என வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் இடங்கை, வலங்கை சாதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இப்பிரச்சினை கவர்னர் செனரல் கோசிஜினிடம் கொண்டு செல்லப் பட்டது. இப்பிரச்சினை பெரிதானதால் கவர்னர் ஊர்வலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.
1789ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நாட் குறிப்பில் வலங்கை சாதியினரான யாதவருடைய தெருவில் இடங்கை சாதியினரான திருவம்பல செட்டி மகன் பல்லக்கில் சென்றார். இதற்கு வலங்கை சாதியினர் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
வலங்கை சாதியினர் இடங்கை சாதியினரின் தெருவுக்குள் செல்லும்போது அதிகமான சச்சரவு ஏற்படவில்லை. இவ்வாறு குடிகள் சாதியின் பெயரால் நடமாட்ட உரிமையை இழந்திருந்தனர்.
பல்லக்கு உபயோகம்
பதினெட்டாம் நூற்றாண்டில் வாகனப் போக்கு வரத்து மிகவும் குறைவாகக் காணப்பட்டது. பெரும் பாலான பொதுமக்கள் நடந்தே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். சிலர் பல்லக்கு, குதிரை, மாட்டு வண்டி போன்றவற்றையும் பயன்படுத்தினர்.
இந்நாட்குறிப்புகள் சில, பல்லக்கு உபயோ கத்தைப் பதிவுசெய்கின்றன. 1785ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இடங்கை சாதியைச் சேர்ந்த தேவரா செட்டி என்பவர் திருமண ஊர்வலத்தில் பல்லக்கு உபயோகித்தார். இதனை வலங்கை சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். கவர்னர் கோட்டேனஸ் இப்பிரச்சினையை விசாரிக்கையில், பல்லக்கு உபயோகிப்பது தங்களது உரிமை என்றும் இதனை இடங்கையர் உபயோகிக்கக்கூடாது என்றும் பிரச்சினை செய்தனர். இறுதிவரை சுமூக தீர்வு ஏற்படாத காரணத்தால், கவர்னர் அனைத்துப் பல்லக்கு ஊர்வலத்தையும் நிறுத்த உத்தரவிட்டார்.
பின்பு 1791ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி வலங்கை சாதியினரான முத்துவிஜய திருவேங்கிடம் பிள்ளையின் மகன் திருமண ஊர்வலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. திருமணம் வெகு விமரிசையாக பச்சைப் பல்லக்கில் யானையின் மேல் அமர்ந்து சகல தெருக் களிலும் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சச்சரவும் இன்றி ஊர்வலம் நடந்ததாக நாட்குறிப்பு கூறுகிறது. இது வலங்கையாருக்குக் கொடுக்கப் பட்ட உரிமை இடங்கையாருக்கு மறுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.
வெள்ளைக்குடைசச்சரவு
நாட்குறிப்பு வெள்ளைக்கொடி, குடை, உப யோகத்தில் வலங்கை, இடங்கையாருக்கிடையே சச்சரவு ஏற்பட்டதைப் பதிவு செய்துள்ளது. 1788 ஜனவரி 14 ஆம் தேதி நாட்குறிப்பில் இடங்கை சாதி யினரான பொன்னப்ப செட்டியின் மகன் ஒரு பட்டுக்குடையும், அழகிய மணவாள செட்டி மகன் ஒரு வெள்ளை குடையும் பிடித்துக்கொண்டு வலங்கை சாதி யினர் தெருவில் சென்றனர். இதைப் பார்த்த மகா நாட்டார்கள் மிகவும் கோபம் கொண்டனர். மறு நாள் 30 வலங்கையார் கவர்னர் செனரல் கனுவே யிடம் முறையிட்டனர். இதன்படி கனுவே இரு வரையும் சிறையிலடைத்தார்.
மற்றொரு சமயம் வலங்கையினரான சுப்புராய பிள்ளை என்பவர் குடைபிடித்துக்கொண்டு செட்டித் தெருவுக்குள் சென்றார். அப்போது செட்டிகள் செனரலிடம் முறையிட, அவர் விசாரித்தார். சுப்புராய பிள்ளை செனரலிடம் தான் வலங்கை தனக்கு குடை பிடிக்கும் உரிமை மாரம்பரியமாக உள்ளது என சொன்னவுடன் செட்டிகள் மன்னிப்பு கேட்டவுடன் மன்னிக்கப்பட்டுக் கூட்டம் கலைக்கப்பட்டது. இவ்வாறு குடை உபயோகத்தில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.
நகரா
நகரா என்பது பெருமுரசு வகைகளுள் ஒன்று. இந்த வாத்தியம் தற்போதும் சில இந்துக் கோயில் களிலும் இஸ்லாமியப் பள்ளிகளிலும் காணப்படுகிறது. இதன் ஓசை இனியதாக இல்லாவிட்டாலும், ஒலி அதிக தூரம் வரை செல்கிறது. இதனால் நகரா செய்தி அறிவிக்கும் கருவியாகச் செயல்பட்டது.
1785ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி நாட் குறிப்பில் நகரா வாத்தியத்தைப் பற்றிய செய்தி உள்ளது. வலங்கை, இடங்கை சாதியினருக்குத் தனித்தனியே கோயில்கள் உள்ளன. இதில் இடங்கை சாதியினர் கோவிலில் நகரா முழங்கும் சப்தம் கேட்டதும் வலங்கை சாதியினர் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ‘நகரா வாத்தியத்தை இயக்கும் உரிமை வலங்கை சாதி யினராகிய எங்களுக்கு மட்டும்!’ என சச்சரவு செய்தனர். செனரல் சுலியாக் இப்பிரச்சினையை விசாரிக்கையில் எந்தவொரு தீர்வும் ஏற்படாததால், நகரா வாசிக்க இருதரப்பினர்களின் கோவில்களிலும் தடைசெய்தார்.
சாதித்தலைவர்
நாட்குறிப்பின் வாயிலாக ஒவ்வொரு சாதிக்கும் சாதித்தலைவர் இருந்ததை அறியமுடிகிறது. இவர்களில் இடங்கை சாதித்தலைவர் #நாட்டார் எனவும், வலங்கை சாதித்தலைவர் #மகாநாட்டார் எனவும் அழைக்கப்பட்டனர். புதுச்சேரியில் பதினெட்டு மகாநாட்டாரும் பல நாட்டாரும் இருந்ததாகச் செய்திகள் உள்ளன. அந்தந்தச் சாதி மக்கள் இணைந்து தங்கள் தலைவர்களைத் தேர்வு செய்தனர். தலைமை துபாசி இவர்களைப் பதவியில் அமர்த்துவார்.
தங்களது சாதிக்குள் ஏற்படும் சச்சரவுகளை சாதித்தலைவர் தீர்த்துவைப்பார். வரிவசூல் செய்து கம்பெனியாருக்கு அளிப்பது போன்ற பணிகளையும் இவர்கள் செய்துவந்தனர்.
இவர்கள் தங்களது சாதி உரிமைகளை நிலை நாட்டுவதில் பெரும் கவனம் கொண்டிருந்தனர். வலங்கையராகிய மகாநாட்டார்கள் வெள்ளைக் கொடி, குடை உபயோகித்தல், நகரா வாசித்தல், ஊர்வலங்கள் செல்லுதல் போன்றவற்றில் தங்களது சாதியப் பெருமையை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகித்தனர்.
1785ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நாட் குறிப்பில் கவர்னர் குத்தான்சோ மற்றும் மகா நாட்டார்களுக்கிடையிலான சந்திப்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. மகாநாட்டார்கள் பரிசுகொடுத்து கவர்னரை வாழ்த்தி மகிழ்வித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது.
1791 ஆகஸ்டு 23ஆம் தேதி கடைவீதிகளில் கடையடைப்பு நடந்தது. இதற்கான காரணத்தை உடனே அறிந்து பதிலளிக்குமாறு சாதித் தலைவர்கள் உத்தரவிடப்பட்டனர்.
1791 டிசம்பர் 1ஆம் தேதி நாட்குறிப்பில் மேயர் சவாரியேர் சாதித்தலைவர்களை முனிசிபலிலே கூடிவரச் செய்தனர். புதுச்சேரி மக்களின் பொது நலனுக்காக பிரெஞ்சு அரசு ரூ.16,000 செலவு செய்த தாகவும், அதனால் இதில் பாதிச் செலவுப் பணத்தைப் புதுச்சேரி மக்களிடம் வசூலித்துத் தரும்படியாகவும் உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சாதித்தலைவர்கள் பங்கு பெற்றனர்.
குழு நியமனம்
வீராநாயக்கர் நாட்குறிப்பில் 1787 ஆம் ஆண்டு டிசம்பர் 14 தேதியில் அரசால் நியமிக்கப்பட்ட குழுவைப்பற்றிய செய்தி உள்ளது. இதில் சிவில் நீதிமன்றத் தலைவர், தமிழ்ச் சாதிய முறை ஐரோப்பியர் களுக்கு விளங்காத காரணத்தால் எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்தார். இக்குழுவில் தமிழரும், தமிழ்க் கிறிஸ்தவர்களும் இருந்ததாகப் பதிவு உள்ளது. சாதிய முறை, சாதியக் கட்டமைப்பு, சாதிகளின் பாரம்பரிய உரிமைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிக்கையினைக் கொடுக்கும்படியாகச் செய்தி உள்ளது.
இவை பிரஞ்சுக்காரர்கள் சாதிய வேறுபாடு களைய முயலாமல் சாதிகளின் முன்பிருந்த வழக்கப்படி செயல்பட நிலைப்பட்டனர் என்பது தெளிவாகிறது.
- வேளாளர் சரவணன் பிள்ளை