18-11-2020 அன்று மாண்புமிகு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலட் அவர்கள், கடந்த 20-09-2020 அன்று விதி 377ன் கீழ் ஏழு சாதிகளை (தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி குடும்பன், பள்ளன், பண்ணாடி, மற்றும் வாதிரியான்) ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒற்றைப் பெயரில் மாற்றியமைக்க வேண்டும் என்ற மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்) நாடாளுமன்ற அவையில் எழுப்பிய கேள்விக்கு எழுதிய பதில் கடிதத்தின் தமிழாக்கம்.
இந்தக் கடிதத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர், கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 341ன் படி அட்டவணைப் பிரிவு சாதிகள் அமையப்பெற்றுள்ளன.
இதில் குடியரசுத் தலைவரின் ஆணைப்படி முதல் பட்டியலில் அமைந்துள்ளவை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் உள்ள அட்டவணைப்பிரிவில் வருகிற சாதிகளாகும்.
இந்தப் பட்டியலில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமெனில் அது நாடாளுமன்ற சட்டத்தின் படியே செய்ய முடியும்
இப்பட்டியலில் உள்ள சாதிகளில் இருந்து எவற்றையாவது நீக்க வேண்டும் என்றாலோ, அல்லது இவற்றோடு புதிதாக எந்த சாதிகளையாவது இணைக்க வேண்டும் என்றாலோ, அல்லது இவற்றிற்குள் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ அதைச் செய்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன
(மாணிக்கம் தாகூர் கேட்டது பெயர் மாற்றம் மட்டுமே, ஆனால் பெயர் மாற்றம் மற்றும் பட்டியல் வெளியேற்றம் ஆகிய இரண்டும் வெவ்வேறல்ல, இவையிரண்டும் ஒன்றுதான். இவை இரண்டையும் சேர்த்தே நிறைவேற்ற இயலும்)
மேற்கண்ட பட்டியலில் உள்ள சாதியினர் தங்களை அதிலிருந்து நீக்க, சேர்க்க, அல்லது மாற்ற விடுக்கின்ற கோரிக்கையானது அந்தந்த மாநில அரசின் அங்கீகரிக்கப்பட்ட இனவரைவியல் (மானுடவியல் இல்லை: Ethnography not Anthropology) ஆய்வறிகையின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.