சாதி வாரி கணக்கெடுப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யின் மக்கள் தொகை பாதிக்கும் மேல் இருந்தால் இட ஒதுக்கீட்டில் உள்ள 50 சதவிகித உச்சவரம்பை தகர்க்க முடியும் என்றார்.
2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழகத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இக்கோரிக்கையை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியும் என்பது அவரது வாதம். அதே போல் பீகாரில் இக்கோரிக்கைக்காக முதல்வர் நிதிஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் ஒன்றிணைந்து உள்ளனர். சமீபத்தில் இருவரும் இணைந்து அனைத்து கட்சிக் குழுவுடன் பிரதமரை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
ஆனால் நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய அரசு எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரை தவிர இதர சாதிகளின் பற்றி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது கட்சித் தொண்டர்களுடன் அரை மணி நேரம் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பில் ஓ.பி.சி., பிரிவினரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இது பற்றி அவர் பேசியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பை முதலில் நான் தான் எழுப்பினேன். இது தொடர்பாக பாராளுமன்றத்திலேயே கோரிக்கை வைத்தேன். எஸ்.சி., எஸ்.டி., உட்பட அனைத்து தரப்பினரின் நலனுக்கானது எனது கோரிக்கை. சுதந்திரத்திற்கு முன்பு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடஒதுக்கீடு உள்ளது. அந்த இடஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை. இதன் விளைவாக பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. புதிய சாதிவாரி கணக்கீடு மூலம் அனைவருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பைக் கூட தகர்க்க முடியும். என பேசினார்.
1992-ல் மண்டல் குழு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டினை தாண்டக் கூடாது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்