இட்லரையே மன்னிப்பு கேட்க வைத்த மாவீரரும், ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்ட வேளாளர் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்த தினத்தில் அவர் வாழ்க்கை வரலாற்றை அறிந்து அஞ்சலி செலுத்துவோம்!!!

0
481
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.

இளமைப் பருவம்

செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். இவர் இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் சுவிட்சர்லாந்து பல்கலைக் கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

விடுதலைப் போரில் ஈடுபாடு

இவர் மன்னர் உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (1960 க்கு முந்தைய பள்ளி இறுதி வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் ” ஏற்படுத்தி ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ‘ஜேய் ஹிந்த்’ என்ற முழக்கத்தை எழுப்பினார்.

‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளையே ஆவார். 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் அவர் இம்முழக்கத்தை முழங்கினார். இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார. விடுதலைப் போரில் இவர் காட்டிய தீவிரம் காரணமாக ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமனைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

ஐரோப்பா பயணம்

சர் வால்டர் வில்லியம் என்ற செருமானியர், தம்மை விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கண்காணிக்கும் ஒற்றராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருடன் செண்பக ராமனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. தன் பெற்றோர் அனுமதியோடு சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பக ராமன் ஐரோப்பா சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து, (செருமன்) பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

வெளிநாடுகளில் விடுதலை உணர்வு

சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார்.பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய்ப்பிரசாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார். ‘புரோ இந்தியா’ என்ற இதழைத்தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார். சீனா, தென்னாப்பிரிக்கா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

வெளிவிவகார அமைச்சர்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ‘ ராஜா மஹேந்திர பிரதாப்’ அவர்களை அதிபராகவும், ‘மவுலானா பர்கத் ‘அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானித்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செம்பகராமன் பிள்ளை பணியாற்றினார். இத்தகைய புரட்சிகளுக்கு செருமனி சுயநல நோக்கத்துடன் ஆதரவளித்து வந்தது. ஆங்கிலேய அரசு கொடுத்த நெருக்கடியின் காரணமாக ஜப்பான் அரசு இவ்வரசுக்கு கொடுத்த ஆதரவை 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றதால் இந்தியாவின் தற்காலிக புகலிட அரசு ஆப்கானித்தானிலிருந்து வெளியேற்றப்பட்டது.

போர் செயல்பாடுகள்

1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து செர்மனி போரிட்டது. இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க செருமானியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். ‘எம்டன்’ என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.இதனால் சென்னைக் கோட்டை உயர் நீதிமன்றத்தின் வெளிப்புறச் சுவரின் ஒருபகுதி அடியோடு பெயர்ந்து விழுந்தது. கோட்டையை நோக்கி வீசப்பட்ட குண்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. அதன் வீரியம் குறைக்கப்பட்டு எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. இதனை இன்றும் அங்கு காணலாம்.

ஹிட்லரும் செண்பகராமனும்

முதல் உலகப்போருக்குப் பின் செருமனியில்நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் செருமனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் செண்பகராமன் ஹிட்லருடன் உரையாடிக் கொண்டிருந்த போது “இந்தியர்கள் பிரித்தானியருக்கு அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே ” என்று இந்தியரைத் தாழ்த்திக் கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட நாட்டுப் பற்று மிக்க செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.

இறுதிக் காலம்

தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாசியர் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி படுத்த படுக்கையில் வீழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறிது நாளில் நலம் பெற்ற செண்பகராமனை, நாசிகள் மீண்டும் தாக்கிப் படுகாயப் படுத்தினார்கள். அதுவே அவரை மரணப் படுக்கையில் வீழ்த்தக் காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது

செண்பகராமனின் இறுதி விருப்பம்

  செண்பகராமன் சிலை, காந்திமண்டபம், சென்னை

செண்பகராமன் உயிர் பிரியும் முன் ” நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்” என்று தம் விருப்பத்தை வெளியிட்டார். இவரின் துணைவியார் ஜான்சி தம் கணவரின் சாம்பலைப் பாதுகாத்து வைத்திருந்தார். முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு செண்பகராமன் விரும்பியபடியே அவரின் சாம்பல் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: