உழவுத் தொழிலே தலையாயது என்ற தலைப்பில் முனைவர் க. சொல்லேருழவன், சிறகு இணையத்தில் எழுதிய கட்டுரையிலிருந்து வேளாண்மை என்பது உதவி, கொடை என்ற பெயரிலேயே ஆரம்பத்தில் வழங்கி வந்து பின்னர் அந்த உதவி, கொடைக்கு அடிப்படையாக அமைந்த உழவுத் தொழிலுக்கும் வேளாண்மை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது தெளிவாகின்றது.
உழவைப் போற்றும் திருக்குறளிலும் கூட வேளாண்மை என்னும் சொல் உதவுதல் என்னும் பொருளில் வந்துள்ளதே ஒழிய உழவுத் தொழில் என்னும் பொருளில் கையாளப்படவில்லை. உழவு என்ற அதிகாரத்திலும் வேளாண்மை எனும் சொல் எக்குறளிலும் பயின்று வரவில்லை என்று கட்டுரையாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
வேளாளர்கள் என்பவர்கள் அரசின் அதிகாரவர்க்கமாக அரச நிர்வாகத்தை நடத்துபவர்களாகவும், அரசர்கள் யுத்தத்துக்கு ஏவும்போது செல்பவர்களாக, படைகளை வழி நடத்துபவர்களாக இருந்தவர்கள். இவர்கள் பிற்காலத்தில் சாதியாக உருவாகி பரந்துபட்ட நிலையால் இடங்கள் சார்ந்து பல பிரிவுகளாக காலப்போக்கில் மாறியிருக்கிறார்கள்.
சமணத்துக்கு சென்று மீண்டும் சைவத்துக்கு வந்த வேளாளர்களில் சிறுபான்மையினரின் சைவ உணவு, வண்ணதாசன் கதைகளின் நெகிழ்வு பண்புகள் போன்றன பொதுப் புத்தியில் பதிந்து, பெரும்பான்மையான வேளாளர்களின் அரச நிர்வாகம், அதிகாரம், போர் சார்ந்த கடும்போக்குப் பண்புகள் பொதுப் புத்திக்கு மறைக்கப்பட்டு விட்டன.
விவசாயம் மருதநிலத்தில் மட்டுமல்லாமல் வேறு நிலங்களிலும் செய்யப்பட்டதையும் கட்டுரை தெளிவுபடுத்துகின்றது.
எடுத்துக்காட்டாக குறிஞ்சி நிலத்தில் குறவர் விவசாயம் செய்ததை நற்றிணை வரிகள் மூலம் எடுத்துக் காட்டுகிறார்.
“மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
துனிபதம் பெற்றகான் உழு குறவர்” (நற்:209:2-3)
குறவர் கார்காலத்தில் மலைச்சாரலில் அகலமாகவும், வளையவும் பதமானதுமான கொல்லையாகிய காட்டினை உழுதார்கள்.
இவற்றிலிருந்து விவசாயம் பல்வேறு குழுக்களால் செய்யப்பட்டது தெளிவாகின்றது. இவர்கள் எவரும் விவசாயம் சார்ந்து வேளாளர்கள் என்று அழைக்கப்படவில்லை. வெவ்வேறு சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்பட்டுள்ளார்கள்.
விவசாயம் சார்ந்து கொடையளிக்கும் பொருளாதார பலம் உடையதாகவும், அரச நிர்வாகத்தினை நடத்துவதாகவும் விளங்கிய சமூகமே வேளாளர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளதே தவிர விவசாயம் செய்தாலே வேளாளர்கள் என்று வழக்கு இருக்கவில்லை என்பது தெளிவு.
உழவுத் தொழிலே தலையாயது என்ற தலைப்பில் முனைவர் க. சொல்லேருழவன், சிறகு இணையத்தில் எழுதிய கட்டுரையை அடுத்து காணலாம்.