உழவுத் தொழில் செய்தாலே வேளாளர்களா? வரலாற்று உண்மை என்ன?

0
755
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

பல்வேறு முயற்சிக்குப் பின்னும் இவ்வுலகம் ஏரின் பின்னாகவே நிற்கிறது. உழவுத் தொழில் செய்வோரே மற்றைத் தொழில் செய்வோருக்கும் உணவு அளித்தலால் அச்சாணி போன்றவர். உழுதுண்பவர் வாழ்நிலை சுதந்திரமானது. மற்றைத் தொழில் செய்வோர் உணவுக்கு உழவரைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆதலால் உழுதுண்பவர்களுக்கு இரந்து வாழும் வாழ்க்கை நிலை இல்லை. மாறாக ஈர்ந்து வாழும் வாழ்க்கை நிலை உடையவர். உழவர், கொடையின் கீழ் அரசர்களின் வெண்கொற்றக் குடைகளும், ஆண்டிகளின் தவக் குடைகளும் குடைபிடிக்கும் என வள்ளுவர் உழவு என்ற அதிகாரத்தில் கூறுவர். உழவுத் தொழிலையும், உழவரின் மேன்மையையும் கூறும் வள்ளுவர் வேளாண்மை என்னும் அதிகாரம் படைத்துக் குறள் பாடாதது ஏன்? என்ற வினா எழுகிறது. அத்துடன் வேளாண் வேளாண்மை ஆகிய சொற்களுக்கான பொருள் யாது? ஆகியவற்றிற்கான விடை தேடுவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியத்தில் வேளாண் எனும் சொல்:

தொல்காப்பியர் வேளாண் என்னும் சொல்லை மூன்று இடங்களில் கையாள்வர். ஒன்று தலைவன் கூற்றை மொழிகின்ற இடத்தில்,

“வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்”; (தொல். களவு:16:8)
என்றும்,

மற்றொன்று தோழி கூற்றில்,

“வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தும்”; (தொல். களவு:23:23)

என்னும் இருவிடங்களை நோக்குமிடத்து வேளாண் என்னும் சொல் கொடை என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர் உபகாரம் என்றும் நச்சினார்க்கினியர் கொடுத்தல் என்றும் உரை கூறுவர்.

தொல்காப்பியர் மரபியலில் வேளாளருக்குரிய தொழிலைக் குறிக்கின்ற பொழுது,

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” (தொல். மரபு:82)

எனக் கூறுவதால் வேளாண் என்பது நான்கு வருணபாகுபாட்டில் வேளாளரைக் குறிக்கினறதே ஒழிய உழவரை அல்ல.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் வேளாண் எனும் சொல்:

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில் வேளாண்மை எனும் சொல் இடம் பெற்றுள்ளது, அது

“கேளாளன் ஆகாமை இல்லை அவற் கண்டு
வேளாண்மை செய்தன கண்”; (கலித்:101:45-46)

என வரும் முல்லைக் கலிப் பாடலடிகளில் இடம் பெறும் “வேளாண்மை” என்னும் சொல்லுக்குப் பொருளாவது உதவுதல் என்பதாகும். மேலும் புறநானூற்றில்,

“கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்”;; (புறநா:74:4)

எனும் அடியில் வேளாண் என்னும் சொல் உதவுதல் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

பத்துப்பாட்டில் பொருநராற்றுப்டையில்,

“வேளாண் வாயில் வேட்பக் கூறி” (பொருநர்:75)

என வரும் அடியில் இடம்பெறும் “வேளாண்” என்பதற்கு விருந்தோம்பல் எனும் பொருள் அமைந்துள்ளது.

ஆதலின் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் இடம்பெறும் வேளாண்மை, வேளாண் ஆகிய இரு சொற்களும் உழவுத் தொழிலைக் குறிப்பிடவில்லை.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேளாண்மை எனும் சொல்,
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில்,

“நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்”; (நாலடி:207:2)

என்னும் அடிகள் உணர்த்துவது அன்பினால் அணுக்கம் இல்லாதவர் உதவியால் கிடைக்கும் கறி உணவு வேப்பங்காயை ஒத்தது என்பதாகும். ஈண்டு வேளாண்மை என்பதும் உதவுதல் எனும் பொருளில் ஆளப்பட்டுளளது.

நான்மணிக் கடிகை,

“………. ……….. ………. வேளாண்மை
வேள்வியோடு ஒப்ப உள” (நான். மணி:54:3)

என்பதால் வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன என்பதால் வேளாண்மை என்பது ஈகை எனும் பொருளில் சுட்டப்பட்டுள்ளது.

இன்னா நாற்பது,

“பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா” (இன்னா:37:1)

என மொழிவதால் செல்வம் இல்லாதவன் உதவிபுரிதல் துன்பம் எனக் கூறுமிடத்து வேளாண்மை உதவுதல் எனும் பொருள்பட வந்துள்ளது.

இனியவை நாற்பது,

“ஏறுடையான் வேளாண்மை இனிது” (இனி:3:3)

என்பதால் உழுமாடுகளை வைத்துப் பயிர்த் தொழில் செய்தல் இனிது என வேளாண்மை என்னும் சொல்லுக்குப் பயிர்த் தொழில் எனப் பொருளுரைக்கிறது இனியவை நாற்பது.

திருக்குறள் நான்கு இடங்களில் வேளாண்மை எனும் சொல்லைக் குறிக்கின்றது. அவை.

“இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி,
வேளாண்மை செய்தல் பொருட்டு” (குறள்:81)

“தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்:212)

“தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு” (குறள்:613)

“தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்”; (குறள்:614)

என்பதாகும். ஈண்டு நான்கு குறள்களிலும் வரும் வேளாண்மை என்னும் சொல் உதவுதல் என்னும் பொருளில் வந்துள்ளதே ஒழிய உழவுத் தொழில் என்னும் பொருளில் கையாளப்படவில்லை. உழவு என்ற அதிகாரத்திலும் வேளாண்மை எனும் சொல் எக்குறளிலும் பயின்று வரவில்லை.

பழமொழி நானூறு,

“வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெஞ் சமத்து” (பழ:173:1)

என்கிறது. ஈண்டு வேளாண்மை என்பது உதவுதல் என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.

திரிகடுகம் வேளாண் குடி பற்றி கூறுகையில்,

“கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீபோல் – ஒழுகல்
உழவின்கட் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு” (திரி:42)

என்கிறது. இவ்விடத்து வேளான் குடிக்குத் தொழில் உழவு என்பதைச் சுட்டுகிறது. இது தொல்காப்பியர் கூறிய வேளாண் மாந்தர்க்கு உழுதூண் என்பதை நினைவூட்டுகிறது.

சிறுபஞ்சமூலம்,

“வேளாண்மை கொல்லார்”; (சிறு:46:2)

என்பதால் நற்குணத்தார் பலருக்கும் பயன்படும் பயிர்த்தொழிலைக் கெடுக்கமாட்டார்கள் எனக் கூறுகிறது.ஈண்டு வேளாண்மை என்பது உழவுத் தொழில் என உணரமுடிகிறது.

முதுமொழிக் காஞ்சி,

“பொய் வேளாண்மை புலைமையிற் றுவ்வாது” (முது:36)

எனக் கூறும். இதனால் தெரிவது விருப்பம் இல்லாவிட்டாலும் விருப்பமுடையவர் போல் செய்யும் ஈகையானது நீசத் தன்மையின் நீங்கி ஒழியாது என்பதாம். இவ்விடத்து வேளாண்மை எனும் சொல் ஈகை என்னும் பொருளில் ஆளுப்பட்டுள்ளiமை நோக்கத்தக்கது.

இதுகாறும் செம்மொழி இலக்கியங்கள் சுட்டும் வேளாண், வேளாண்மை எனும் சொற்கள் உணர்த்துவது கொடை, உதவி பயிர்த் தொழில் ஆகிய மூன்று பொருளைத் தருவதால் வேளாண்மை என்பது ஒரு சொல் பலபொருள் தன்மை உடையது.
அத்துடன் உலகத்து உயிர்கள் வாழ்வதற்கு உழவுத் தொழிலை மேற்கொண்டு உணவை உற்பத்தி செய்து கொடையாகக் கொடுத்து உதவுதல் எனும் நிலையில் உழவுத் தொழிலுக்கு வேளாண்மை என்னும் பெயர் ஆகி வந்ததால் அது ஆகுபெயராயிற்று.

ஆதலின் வேளாண்மை என்பது உழவுத் தொழிலை மட்டும் குறிக்காது பண்டைய அரசர்கள் அறம் நோக்கியும் கலை வளர்ச்சிப் பற்றியும், ஊழிய பாராட்டாகவும் வினையூக்கற் பொருட்டும் பல்வேறு கொடை நிகழத்தி வந்தனர். அவை, உண்டிக் கொடை, பொற்கொடை, ஊர்திக் கொடை, சின்னக் கொடை, பெயர்க்கொடை, நிலக்கொடை, மகற்கொடை, ஆட்சிக்கொடை, விலங்கினக் கொடை ஆகியவற்றையும் குறிக்கும். இருப்பின் மேற்குறிப்பிட்ட கொடைகளை விட நாள்தோறும் உணவு உற்பத்தி செய்து உலக உயிர்களைக் காக்கும் உழவுத் தொழில் மற்றைய கொடைகளை விட மேலானது என்பதால் வேளாண்மை எனும் சொல் உழவுத் தொழிலைக் குறித்து வழங்கலாயிற்று.

குறிஞ்சி நில வேளாண்மை:

குறிஞ்சி நில மக்களாகிய குறவர் மலைப் பக்கத்தில் இடம்கண்டு கார்காலத்தில் மழை பெய்தவுடன் நிலத்தை உழுது பண்படுத்திய செய்தியைப் புறநானூறு,

“கார்பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து
பூமி மயங்கப் பல உழுதுவித்தி” (புறநா:120:2-3)

என மொழிகின்றது.

மலைவாழ் மக்கள் கார்காலத்தில் மலைச்சாரலில் அகலமாகவும், வளையவும் பதமானதுமான கொல்லையாகிய காட்டினை உழுத செய்தியை நற்றிணை,

“மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
துனிபதம் பெற்றகான் உழு குறவர்” (நற்:209:2-3)

எனக் கூறுகின்றது.

குறமகளிர் தினை கவரவரும் கிளிகளை மூங்கிலால் செய்த தட்டை, கவண், குளிர் போன்ற கருவிகளைக் கொண்டு விரட்டியதை,

“கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த
புலிஅஞ்சு இதணம் ஏறிஅவண
சாரல் சூரல் தகைபெற வலந்த
தழலும் தட்டையும் குளிறும் பிறவும்
கிளிகடி மரபின ஊழ்ஊழ் வாங்கி” (குறி.பா:40-44)

எனக் குறிப்பிடுகின்றது. குறமகளிர் தினை காத்தது போல் இரவில் சேம்பு, மஞ்சள் ஆகியவற்றைப் பன்றி அகழாமல் இருக்க குறவர் பறையோசை எழுப்பியதை மலைபடுகடாமும்(343-344) ஊதுகொம்பு ஊதி காத்ததை அகநானூறும்(94:9-11) செப்புகின்றன. தினை முற்றியதும் அதனைக் கொய்து பாறையின் மேல் போட்டு யானையைக் கொண்டு காலில் மிதிக்கச் செய்து தினையைப் பிரித்தெடுத்த செய்தியை

நற்றிணை

“நிலம் கண்டன்ன அகன்கண் பாசறை
மென்தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும்”; (நற்:125:10-12)

என விளக்குகின்றது.

முல்லை நில வேளாண்மை:

முல்லை நில உழவர் வரகு, பயிறு, நெல் போன்றவற்றை விளைவித்துள்ளனர் என்பதை இடைக்காடனார் பெரும்புனவரகின் எனும் தொடரால் அறியமுடிகிறது.

முல்லை நில வேளாண்மையில் பயிறு விளைவித்தலைச் சிறப்பாக அகநானூறு சுட்டுகிறது.

“முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கி
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினை கலித்து
பாசிலை அமன்ற பயறு;”; (அகநா:262:1-4)

முல்லை நில வேளாண்மையில் நெல் விளைந்ததை அகநானூறு: 41:4-7 ஆம் பாடல் சிறப்பாக எடுத்துரைக்கின்றது.

மருத நில வேளாண்மை:

தாம் செய்யும் தொழிலால் மருத நில மக்கள் ஏரின் வாழ்நர் களமர் (புறநா:212-387) என விளிக்கப்படுகின்றனர்.

வேளாண்மைக்கு அவர்கள் பயன்படுத்திய நிலம் வன்புலம், மென்புலம் எனப்பட்டது. பெரிய மழைபெய்த இருள் புலர்ந்த காலைப் பொழுதில் உடும்பின் முகம் போன்ற ஏர்களால் நிலத்தைக் கீழ்மேலாகப் புழுதி புரளும்படி உழுததை அகநானூறு(194:1-3)சுட்டுகிறது.

பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி நாஞ்சிலின் முழுக்கொழுவும் மறையும்படி ஆழ உழுததை பெரும்பாணாற்றுப்படை,

“குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முழுக்கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி” (பெரு:197-202)

செப்புகின்றது.

இவ்வாறு உழும் பொழுது ஏர்மங்கலம் பாடுவதை மலைபடுகடாம்(469) செப்புகின்றது.

மருத நில வேளாண்மையில் கரும்பு முக்கிய வேளாண்மையாக இருந்ததைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன (பட்:20, குறுந்:262, ஐங்:65, புறநா:28,29,386, பதி:30)

நெய்தல் நில வேளாண்மை:

நெய்தல் நில மக்களால் செய்யப்பட்ட வேளாண்மை உப்பு வேளாண்மையாகும்.. உழுகாது உவர் நிலத்தில் உப்பை விளைவிக்கும் உழவராகப் பரதவர் சுட்டப்பெறுகின்றனர்.

உப்புப் பாத்தியில் கடல் நீரைப் பாய்ச்சி உப்பு விளைவிப்போர் வானத்தை வேண்டாத உழவினை உடையவர் என்பதை நற்றிணை,

“நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின”; (நற்:254:10-11)

எனக் குறிப்பிடுகின்றது.

பாலை நில வேளாண்மை:

பாலை நில மக்களை வில்லேருழவர் என நற்றிணை(35:5)உருவகம் செய்கிறது. பாலை நில மக்கள் தினை, பருத்தி ஆகியவற்றை விளைவித்த செய்திகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

தினையை உண்ண வரும் மானை மகளிர் விரட்டியது(அகநா:14:2). பருத்திக் காய்களைக் கொத்திய கோழி அதிலுள்ள விதைகளை விடுத்து இளங்காயைத் தன் பெடைக்கு ஊட்ட சிதறிய வெள்ளி விதைகளை வறுமையுற்ற மகளிர் சேகரித்தமை ஆகியவற்றால் தினை, பருத்தி ஆகியன பாலை நிலத்தில் வேளாண்மை செய்யப்பெற்றது அறியப்பெறுகிறது.

முடிவுரை:

ஐந்நில வேளாண்மையில் வட்டில், கூடை ஆகியவற்றில் விதை எடுத்துச் சென்றது, விதைப்பதற்குக் கூலியாக நெல் வழங்கியது, நாற்று வளர்த்து வயலில் நட்டது, நாற்று நட அதிகாலையில் சென்றது, களையெடுக்கும் உழவரைத் துளர்எறி வினைஞர் என்றது, களையெடுப்பதற்குக் களைக்கொட்டு மற்றும் மரத்தால் செய்த கருவி பயன்படுத்தியது, விளைந்த நெல்லைக் கூரிய அரிவாளால் அரிந்தது, நெற்கட்டுக்களைக் களத்திற்குக் கொண்டு சென்றது, நெல்மணிகளை அடித்தது, உதிராத நெல்மணிகளைப் பரித்து எடுக்க கடாவிட்டது, வேளாண்மைக்குத் தேவையான நீரைக் காஞ்சி மரத்தின் துண்டுகளை நட்டு கரும்பினைக் குறுக்கே வைத்து அடைத்துப் பயன்படுத்தியது வேளாண்மையோடு தொடர்புடைய செய்திகளும் சங்க இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.

  • கட்டுரையாளர் : க. சொல்லேருழவன்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: