மதுரை அருகே பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு, சிதைந்த கோயில் கண்டுபிடிப்பு

0
447
Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

மதுரை அருகே  வில்லூர் பகுதியில் உள்ள போத்தநதி என்ற ஊரில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கால தமிழ்க் கல்வெட்டு மற்றும் சிதைந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போத்தநதி பஞ்சாயத்து தலைவர் விநாயகமூர்த்தி, தங்கள் ஊரில் பழமையான கோயில் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில், மதுரையை சேர்ந்த கல்லூரி பேராசிரியரும்,  பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் ஆனந்தகுமரன், கருப்பசாமி கொண்ட குழுவினர் கள ஆய்வில் ஈடுபட்டனர். இதில், கி.பி 13ம் நூற்றாண்டை சேர்ந்த முதலாம் மாறவர்மன்  சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும்,  சிதைந்த நிலையில் சிவன் கோயிலும்  கண்டறியப்பட்டன.

இதுகுறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில் ‘‘செங்குடிநாடு பகுதியில் மதவேல நாயக்கனூரின் கட்டுப்பாட்டில் கௌசீக நதிக்கரையின்  மேற்கு பகுதியில் போத்தன் என்ற சிற்றரசர் ஆட்சி புரிந்ததாகவும் அவர் பெயரில் போத்தநதி என்ற ஊர் பெயர் வந்ததாகவும் அறியப்படுகிறது. இவ்வூரின் தெற்கு பகுதியில் போத்தன் ஊரணியின் அருகே பாழடைந்த நிலையில் கருவறை,  கோபுரம்,  முன் மண்டபம் கொண்ட கோயில் கண்டறியப்பட்டது. செங்கற்கள் சாந்து சேர்த்து கட்டிய  கோபுரம் முற்றிலும் சிதிலமடைந்தும், சிற்பங்கள் சிதைந்த நிலையிலும் உள்ளன. கருவறை சதுர வடிவத்தில் கிழக்கு நோக்கியும்,  உட்பகுதி வடக்கு, தெற்கு திசையில் மாடக்குழிகளும் சிலைகள் இன்றி அமைந்துள்ளன. முன்மண்டபம் முற்றிலும் சிதிலமடைந்ததால் மிஞ்சிய தூண்களில் வாயிற் காவலர்கள் ஆண்,  பெண் சிற்பங்களாக நின்று வணங்கிய நிலையிலும்,  பூ மொட்டு போதிகையுடன்  தூணின் இரு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளன.   

 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட கல்வெட்டில் 8 வரி  சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் பல சொற்கள் தேய்மானம் ஏற்பட்டதால் தமிழக தொல்லியல் துறையின்  ஓய்வு பெற்ற ஆய்வாளர் பேராசிரியர் சாந்தலிங்கம் உதவியுடன்  மை   படியெடுத்து ஆய்வு செய்த போது “திருவாய்க்கேழ்விக்கு மேல் ஸ்ரீ கோமாற பன்மரன் திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு மாடக்குழக்கு மதுரை திருவாலவாயுடையார் கோயில்” என்ற வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தைச்( 1216- 1239) சேர்ந்தவையாகும். திருவாலவாயுடையர் என்று அழைக்க கூடிய சிவன் கோயிலுக்கு சந்தியா தீபம் ஏற்றிட நிலம் தானமாக வழங்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டின் காலம் கி.பி 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது’’ என்றார்.

நன்றி : தினகரன்

Click here to visit Velaler Matrimony, a No:1, Vellala Marriage Web Portal

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: